டிக்டாக் சகவாசம் சேலையை கிழித்தது..! வீதிக்கு வந்த பெண்கள்

டிக்டாக்

மதுரையில் டிக்டாக்கில் நடிப்புத்திறமையை காட்டிய இரு தோழிகளை, விலைமாதர்களாக சித்தரித்து அதே டிக்டாக்கில் பரப்பியதால், தோழிகளில் ஒருவர் குடும்பத்தை பிரிந்து வீதியில் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

டிக்டாக் ஒரு ஸ்வீட் பாய்சன்..! என்று பலமுறையை தலைபாடாக அடித்தாலும் கேட்காமல், டிக்டாக் மிகவும் பாதுகாப்பான பொழுதுபோக்கு செயலி என்று நம்பி வீடியோ பதிவிட்ட சில பெண்கள், தங்கள் குடும்பத்தினரை பிரிந்து அவமானத்துடன் வீதியில் தவிக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மதுரை மாவட்டம் ஒத்தக்கடையை சேர்ந்த தோழிகளான மீனாட்சியும் கயலும் பாரம்பரிய உடையான சேலையுடன் டிக்டாக்கில் தோன்றி தாயும் பிள்ளையுமாக நடிப்புத்திறமையை வெளிக்காட்டுவது வழக்கம்.

இருவருக்கும் திருமணமான நிலையில் டிக்டாக் செயலிக்கு அடிமையானதால் அவ்வப்போது ஆன்மீகம், நையாண்டி, நகைச்சுவை போன்ற வீடியோக்களையும் டிக்டாக் செயலியில் பதிவிட்டு லைக்ஸ்களை அள்ளியதாக கூறப்படுகிறது.

சல்லிக் காசுக்கு பிரயோசனமில்லாத லைக்குகளுக்கு ஆசைப்பட்டு மீனாட்சியும் கயலும் தங்களுடைய டிக்டாக் பிரைவேட் கணக்கில் பதிவிட்ட வீடியோக்களே, தங்களை சந்திசிரிக்க வைக்க போகிறது என்பதை உணரவில்லை.

இந்நிலையில், மீனாட்சிக்கு டிக்டாக் மூலம் தேனியைச் சேர்ந்த சுகந்தி என்ற பெண்ணின் நட்பு கிடைத்துள்ளது. அந்த பெண் ஒருபடி மேலே போய், லைக்கிற்காக தனது ஆண் நண்பருடன் செய்யும் காதல் சேட்டைகளை எல்லாம் டிக்டாக்கில் பதிவிட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் சுகந்திக்கும் மீனாட்சிக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு டிக்டாக் செயலியில் நட்பை துண்டித்து கொண்டனர்.

மீனாட்சியுடனான நட்பு துண்டானதும் ஆத்திரம் அடைந்த சுகந்தி, தனது ஆண் நண்பர் செல்வா என்பவருடன் சேர்ந்து மீனாட்சி மற்றும் தோழி கயல் ஆகியோரின் டிக்டாக் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து, இருவரையும் விலை மாதர்களாக சித்தரித்து டிக்டாக் செயலியில் பதிவிட்டதால் இருவரது குடும்பத்திலும் புயல்வீசத் தொடங்கியது. கயலின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர் வீட்டைவிட்டு துரத்தியதால் தற்போது காப்பகத்தில் தவித்து வருகிறார்.

மீனாட்சி ஒத்தக்கடை காவல்நிலையத்திலும் , கயல் மதுரை மாநகர காவல் ஆணையரிடமும் புகார் அளித்துள்ள நிலையில், தேனியைச் சேர்ந்த சுகந்தி மற்றும் மதுரை செல்வா ஆகியோர் மீது ஒத்தக்கடை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க முன்ஜாமீன் பெற்ற சுகந்தியிடம் இரு செல்போன்களும் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், டிக்டாக், வாட்ஸ் ஆப், முகனூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒருவருடம் கருத்து பதிவிட தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மதுரையில் செவிலியர் கல்லூரியில் பயின்றுவந்த மாணவி டிக்டாக்கில் பதிவிட்ட வீடியோக்களை தவறாக சித்தரித்து, வீடியோவாக பதிவிட்டதாக பொள்ளாச்சியைச் சேர்ந்த பூபதி என்பவரை ஒத்தக்கடை போலீசார் கைது செய்துள்ளனர்.

டிக்டாக் சகவாசத்தால் பலர் இங்கே நீதிமன்றத்திற்கும் வீட்டுக்கும் நடந்து கந்தலாகிக் கொண்டிருக்க, இது தெரியாமல் ஸ்மார்ட்போன் செயல் இழந்து விட்டதால், டிக்டாக்கில் இனி நடிக்க இயலாதே என்று நடிகையர் திலகம் ஒன்று கண்ணீர் வடித்து வீடியோ பதிவிடும் அற்புதமும் அதிசயமும் தமிழகத்தில் நிகழத்தான் செய்கின்றது..!

குடும்பப் பெண்கள் பலர் பொழுதுபோக்கு என்ற பெயரில் முழுநேர டிக்டாக் அடிமைகளாகி "லைக்"களுக்கு ஆசைப்பட்டு "லைஃப்"பை தொலைத்து வருகின்றனர் என்பதே கசப்பான உண்மை..!